தீபாவளி பண்டிகை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு - முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
தீபாவளி பண்டிகை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு - முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை
Published on: 

சென்னை,

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு இலவச மளிகை தொகுப்பு வழங்குவது குறித்து நிதித்துறை அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

விலைவாசி உயர்வு

தமிழகத்தில் தற்போது அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை உள்பட அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. நாட்டின் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் விலைவாசி உயர்வு உச்சத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த விலைவாசி உயர்வு தவெக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையை சமாளிக்கவும், வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் மக்களுக்கு நேரிடையாக நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது.

இலவச மளிகை தொகுப்பு

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் வாயிலாக தீபாவளி சிறப்பு இலவச மளிகைப்பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நிதி மற்றும் உத்தேச செலவினங்கள் குறித்து உடனடியாக விரிவான அறிக்கை அளிக்குமாறு நிதித்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தக தவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்களின் அதிருப்தியை குறைக்கவும், பண்டிகை காலத்தில் குடும்ப வரவு செலவு சுமையை தணிக்கவும் இத்தகைய இலவச மளிகை பொருட்கள் தொகுப்பு பெரும் உதவியாக இருக்கும் என முதல்-அமைச்சர் விஜய் இடம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மைதா மற்றும் தீபாவளி பலகாரங்கள் செய்ய தேவையான அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய சிறப்பு கூப்பன்கள் அல்லது பொருட்கள் நேரடியாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை

இது தொடர்பான இறுதிக்கட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் விநியோக முறைகள் குறித்து தலைமை செயலகத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது கொரோனா பெருந்தொற்று இருந்தது. அப்போது மே மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 இரு தவணைகளாக கொடுக்கப்பட்டது. அதுபோல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் ரேஷன் கடையில் 14 மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

துணிப்பையுடன் 14 மளிகை பொருட்கள் கொள்முதல் விலையாக ரூ. 397.33 கணக்கிடப்பட்டது. கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு, டீ தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்தூள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப்பு ஆகிய 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கியது.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு ரூ. 2,500 வழங்கப்பட்டது. அதனுடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட 21 மளிகை பொருட்கள் அடங்கிய பையும், முழு கரும்பும், ரூ1,000 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகளின் வீண் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஏழை எளிய மக்களின் ஆதரவை பெறும் வகையிலும், தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே இந்த இலவச மளிகை தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com