திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

2025-2026-ம் ஆண்டிற்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.82.55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்
Published on

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை புனித தாமஸ் ரோடு (ஏ.ஆர்.லைன்) கதர் அங்காடியில் இன்று காந்தியடிகளின் 157வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் கதர் அங்காடி, 2 கிராமிய நூற்பு நிலையங்களும், காலணி உற்பத்தி அலகும், பேட்டையில் தச்சுக்கொல்லு உற்பத்தி அலகும் இயங்கி வருகிறது. 2 கிராமிய நூற்பு நிலையங்களில் 19 நூற்பாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த அலுவலக கட்டுப்பாட்டில் 9 வாரிய தொழில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 10 பனைவெல்ல கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைபிடித்து இந்த துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காந்தியடிகளின் 157வது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்கள் ஆகிய இடங்களில் 2.10.2025 முதல் கதர் சிறப்பு விற்பனை காலம் முடியும் வரை தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் செயல்படும்.

மேலும் தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், பட்டு துண்டுகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், இலவம் பஞ்சினால் ஆன மெத்தை, தலையணைகள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளினால் கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் ஆண்டு முழுவதும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு அவர்களது மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி பண்டிகை காலம் வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.

2025-2026-ம் ஆண்டிற்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.82.55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட கதர் துணிகளை பெருமளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து காந்தியடிகளின் 157வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் சுகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் திருநெல்வேலி உதவி இயக்குநர் நல்லதம்பி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் திருநெல்வேலி அலுவலர்கள் தங்கசாமி, ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com