தீபாவளி சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி! - போலீசார் விசாரணை

தலைமறைவாக உள்ள வினோத் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி! - போலீசார் விசாரணை
Published on: 

சென்னை,

எண்ணூரில் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.43 லட்சம் மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை எண்ணூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது மனைவி கல்யாணி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவரிடம் தீபாவளி சீட்டுக்காக பணம் செலுத்தி வந்தார். மேலும், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் அந்த சீட்டில் சேர்த்துள்ளார்.

குடும்பத்துடன் தலைமறைவு

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சீட்டுக்கான பணம் மற்றும் பொருட்கள் கிடைக்கும் என்று கல்யாணி காத்திருந்தார். ஆனால், அவருக்கு பணமும் பொருட்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வினோத் குமாரிடம் கேட்டறிவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. வினோத் குமார் தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது.

ரூ.43 லட்சம் மோசடி

இதனால் அதிர்ச்சியடைந்த கல்யாணி, இதுகுறித்து எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வினோத் குமார் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.43 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள வினோத் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, அவரிடம் தீபாவளி சீட்டுக்காக பணம் செலுத்தியவர்கள் இந்த மோசடி குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களும் போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com