

சென்னை,
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் வாடகை கார்களை நாடி வருகின்றனர்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரெயில்களில் இடம் கிடைக்காமலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் மாற்று வழிகளைத் தேடி வருகின்றனர். இதனால் சென்னையில் வாடகை கார்களுக்கு தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் சைக்கிள்கள் வாடகைக்கு கிடைப்பது வழக்கம். அதேபோல் தற்போது சென்னையில் ஏராளமான நிறுவனங்கள் கார்களை வாடகைக்கு வழங்கி வருகின்றன. கார் ஓட்டத் தெரிந்தவர்கள் 4 அல்லது 5 பேர் ஒன்றாகச் சேர்ந்து வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
சென்னையில் இதுபோன்ற வாடகை கார்கள் ஆயிரத்துக்கும் மேல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கார்களை ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். வாடகைக்கு கார் எடுப்பவர்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினால் போதும். சொந்த காரைப் பயன்படுத்துவது போல் காரை எடுத்துச் சென்று ஓட்டலாம்.
இதற்கு நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரம் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலை வாடிக்கையாளர்களே நிரப்பிக்கொள்ள வேண்டும். தினமும் 300 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒருவர் 4 நாட்களுக்கு ஒரு காரை வாடகைக்கு எடுத்து 1,200 கிலோ மீட்டர் வரை பயணம் செய்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்கு மேல் பயணம் செய்தால் ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.
சொந்த ஊர்களுக்குச் சென்ற பிறகு நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு எளிதாகச் சென்று வர முடிவதால் பலரும் வாடகை கார்களைத் தேர்வு செய்து வருகின்றனர். இதனால் சென்னையில் வாடகை கார் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.