

சென்னை,
தங்கம் விலை நேற்று ஒரு பவுன் ரூ.97,600-க்கு விற்பனை ஆனது. இப்படியே விலை ஏறிச் சென்றால் எப்படி தங்கம் வாங்குவது? என ஏழை-எளிய, நடுத்தர வர்க்கத்தினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது அப்படியே விற்பனையிலும் பிரதிபலித்து இருக்கிறது.
விலை கட்டுக்கடங்காமல் செல்வதால் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை விற்பனையை பொறுத்தவரையில், 25 சதவீதம் வரை குறைந்து உள்ளதாக மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் கோல்டுகுரு சாந்தக்குமார் கூறினார். அதற்கேற்றாற்போல், பெரும்பாலான நகைக்கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் முக்கிய ஆலோசகர் எல்.கே.எஸ்.சையது அகமது கூறுகையில், தங்கத்தின் விலையேற்றம் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. நகை வியாபாரிகள் மட்டும் இதனால் சந்தோஷப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா, அது தான் இல்லை. பல கோடிகள் அதில் முடக்கி அதை விற்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்' என்றார்.