தீபாவளி சிறப்பு பஸ்கள்: ஒரே நாளில் 2 லட்சம் பேர் பயணம் - கிளாம்பாக்கத்தில் அமைச்சர் நள்ளிரவு ஆய்வு

இன்று 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 3,240 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 5,431 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு பஸ்கள்: ஒரே நாளில் 2 லட்சம் பேர் பயணம் - கிளாம்பாக்கத்தில் அமைச்சர் நள்ளிரவு ஆய்வு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
Published on: 

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னையில் தங்கி பணிபுரியும் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் பயணத்தை தொடங்கினர். பொதுமக்கள் நெரிசல் இன்றி, பாதுகாப்பாக பயணம் செய்ய அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், சிஎம்.டி.ஏ. காலநிலை பாங்கா மற்றும் தாம்பரம் (மறைமலைநகர்) ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பு பேருந்துகள்

வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு போதுமான அளவு போக்குவரத்து வசதிகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்திருந்தார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேற்று மாலையில் இருந்தே பயணிகள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்.

3,209 பேருந்துகள் இயக்கம்

நேற்று ஒரே நாளில் 2,191 வழக்கமான பேருந்துகளுடன், திட்டமிடப்பட்டதை விட கூடுதலாக 1,018 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,209 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, 1 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் நள்ளிரவு ஆய்வு

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவில் நேரில் சென்று அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் தடையின்றி கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தார். பேருந்து நிலைய வளாகத்தில் காத்திருந்த பயணிகளிடம் கலந்துரையாடிய அவர், தாமதமின்றி பயணம் மேற்கொள்ள போதுமான வசதிகள் உள்ளதா, சிரமங்கள் ஏதேனும் இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.

புதிய பேருந்து சேவை தொடக்கம்

இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் புதிய பேருந்து சேவைகளை அமைச்சர்கள் விஜய் தமிழன் பார்த்திபன், சரத்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேருந்து வசதி இல்லாத கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் 9 புதிய வழித்தடங்களில் இந்தச் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

2 லட்சம் பேர் பயணம்

அரசு பேருந்துகள் மட்டுமின்றி, தனியார் ஆம்னி பேருந்துகள் மூலமாகவும் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதையும் சேர்த்து மொத்தம் சுமார் 2 லட்சம் பேர் பேருந்துகள் மூலம் நேற்று மட்டும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இன்று 5,431 பேருந்துகள்

இன்று 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 3,240 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 5,431 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை முதல் விடுமுறை என்பதால், இன்று வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X