கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை

கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை
Published on

கள்ளக்குறிச்சி கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை கலெக்டர் ஷ்ரவன்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் கூறுகையில், தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய துணி ரகங்களை இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.

இச்சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய, கோவை மென்பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், காஞ்சீபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், நெகமம் பருத்தி சேலைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி சேலைகள், மெத்தை, தலையணை, வேட்டி- சட்டை உள்பட பல்வேறு ரகங்கள் உள்ளன.

தவணை முறையில் விற்பனை

இந்த ஆண்டு ரூ.45 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தின்படி வாடிக்கையாளர்களிடம் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5 ஆயிரம் வரை 11 மாத தவணைகள் மட்டும் பெறப்பட்டு 12-வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம். 30 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்பு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே அனைத்து துறை ஊழியர்களும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுப்ரமணியன், விற்பனை நிலைய மேலாளர் மகாலட்சுமி மற்றும் அலுவலக ஊழியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com