‘காவிரியின் குறுக்கே அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது மோசடி’ - வைகோ

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்வதாகவே இருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
‘காவிரியின் குறுக்கே அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது மோசடி’ - வைகோ
Published on: 

சென்னை,

மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரிப் படுகை பாலைவனமாக மாறிவிடும் நிலைமைதான் ஏற்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

கர்நாடக முதல்-மந்திரி

“காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், ‘நாட்டின் சட்டத்தைப் பற்றி தமிழக முதல்-அமைச்சர் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு, தனது சொந்த இடத்தில் அணையைக் கட்டுவதற்கு இந்திய சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

கட்சி வேறுபாடின்றி, கர்நாடகத்தில் உள்ள பா.ஜ.க மற்றும் என்.டி.ஏ தலைவர்கள் அனைவரும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்தைப் பற்றி நேரடியாகப் புரிந்துகொள்ளத் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகத்திற்கு ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை கர்நாடகா ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தாது’ என்று தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

காவிரியின் குறுக்கே அணைக் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருக்கிறது என்று கர்நாடக முதல்-மந்திரி கூறி இருப்பது மோசடியாகும். 2018 பிப்ரவரி 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்வதாகவே இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மிகத் தெளிவானது. ‘இந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், அந்த மாநிலத்திற்குள் உள்ள நீரின் பயனை அனுபவிக்கவும் உள்ள அதிகாரம் பாதிக்கப்படாது.

மேல்பகுதி (Upper Riparian) மாநிலம், கீழ்ப்பகுதி மாநிலங்களுக்கு அட்டவணைப்படி வழங்க வேண்டிய நீர்வரத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

கீழ்பகுதி மாநிலம் (lower Riparian), அதாவது தமிழ்நாடு பெற்று வரும் காவிரி நீர் வரத்தை தடுக்கும் வகையில் மேல்பகுதி மாநிலமான கர்நாடகம் தடுப்பணைகளை அமைக்க கூடாது’ என்பதுதான் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின் சாரம்சமாகும்.

கர்நாடக மாநிலத்தின் எந்த நடவடிக்கையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நீர்வரத்தை பாதிக்கக் கூடாது என்பதே தீர்ப்பின் முக்கியக் கோட்பாடாகும்.

கண்டனம்

ஆனால் கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக வஞ்சகமான முறையில், மத்திய பா.ஜ.க. அரசின் அனுமதியைப் பெற்று மேகதாது அணையைக் கட்ட முனைந்து இருப்பது கண்டனத்துக்கு உரியது.

பருவமழை

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரின் அளவு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் வழக்கமாகத் தமிழகத்திற்குப் பெறப்பட வேண்டிய 123.14 டி.எம்.சி நீருக்குப் பதிலாக, வெறும் 44.208 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரில் சுமார் 79 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1974-75 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த காவிரி நீர்வரத்துகளில் இது 4-வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரி நீர் பற்றாக்குறை காரணமாகத் தமிழக டெல்டா பகுதியில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பு கடந்த ஆண்டை விட சுமார் ஒரு லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது. கடந்த 2025-26 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.64 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது (அக்டோபர் 5 நிலவரப்படி) வெறும் 1.68 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில் 1.27 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையையே தேர்வு செய்துள்ளனர். நீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டே விவசாயிகள் அதிக நீர் தேவைப்படும் பாரம்பரிய நாற்று நடும் முறையைத் தவிர்த்து நேரடி விதைப்புக்கு மாறியுள்ளனர்.

சாகுபடி

டெல்டாவில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே தற்போதைய சாகுபடி பரப்பில் 72 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இதில் கடலூரில் 52,700 ஏக்கரும், திருவாரூரில் 68,400 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் இறுதியில் மொத்த சாகுபடி பரப்பு 13 லட்சம் ஏக்கரைத் தொட்ட நிலையில், இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள 12.7 லட்சம் ஏக்கர் இலக்கை எந்த அளவுக்கு எட்ட முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரிப் படுகை பாலைவனமாக மாறிவிடும் நிலைமைதான் ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்தி, மேகதாது அணைத் திட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X