

சென்னை
அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தமிழக சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவர் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் அவரது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா போட்டியிடுகிறார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரேமதலா விஜயகாந்த், தன்னால் விருத்தாசலம் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள இயலாது என்றும், கட்சி நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் கட்சி தலைவர் விஜயகாந்த் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இன்று மாலை கட்சி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருத்தணியில் பிரசாரம் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையிலும், திருத்தணி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பொதட்டூர்பேட்டையிலும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
அடுத்தடுத்த நாட்களில் சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விஜயகாந்தின் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தே.மு.தி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.