

சென்னை,
கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜயகாந்த், 2011 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் , எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த விஜயகாந்த் பெரும்பாலும் கட்சி விவகாரங்களில் தலையிடாமல் உள்ளார். கூட்டணி. தொகுதிப் பங்கீடு .வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து அவரது மனைவியும், கட்சியின் பொருளாளரும் ஆன பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் தேமுதிகவின் தலைவராக உள்ள விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. இதனால் கட்சியின் பொருளாளராக உள்ள பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர். மேலும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி பிரேமலதாவை நியமிக்க வேண்டும் என்றும் சில மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று நிருபர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். கட்சியில் செயல்தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனால் புதியதாக செயல்தலைவர் பதவி ஏற்படுத்துவது குறித்து பொதுக் குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிப்பதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் சினிமாவில் நடிக்கவில்லை. அரசியல் பணிகளை கவனித்துக் கொண்டு ஓய்வில் இருக்கிறார் என்று அவர் கூறினார்.