

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1-ந்தேதி நடைபெற்றது.
தொகுதி உடன்பாடு
அப்போது, கடந்த 2011சட்டமன்ற தேர்தலை போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு குறைந்தபட்சம் 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டார். தி.மு.க. தரப்பில் அதிகபட்சம் 5 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும். அதுவும் எங்களுடைய உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டதால் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் முடிவடைந்தது.
பின்னர் தி.மு.க-விடுதலை சிறுத்தைகள் கட்சி குழுவினர் தொலைபேசி வாயிலாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது குறைந்தபட்சம் 8 தொகுதிகளையாவது தாருங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வைத்த கோரிக்கையையும் தி.மு.க. ஏற்க மறுத்துவிட்டது. வேண்டும் என்றால் 6 தொகுதிகள் தருகிறோம். அதற்கு மேல் முடியாது என்று கறாராக தெரிவித்துவிட்டனர்.
6 தொகுதிகளை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பமான சூழ்நிலையால், நேற்றுமுன்தினம் தி.மு.க. தரப்பில் இருந்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குழுவினர் செல்லவில்லை. இந்தநிலையில் தொலைபேசி வாயிலாக தொடர்ந்த பேச்சுவார்த்தையில், 6 தொகுதிகளை ஏற்கிறோம். ஆனால் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டோம். தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம். இந்த நிபந்தனையை ஏற்றால் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தை மேற்கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தயார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதற்கு தி.மு.க. குழுவினரும் ஆமோதித்து, பச்சைக்கொடி காட்டினர்.
ஒப்பந்தம் கையெழுத்து
இதைத்தொடர்ந்து தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைசெல்வன் உள்பட நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று மதியம் 1.20 மணிக்கு வந்தனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது முன்னிலையில் தி.மு.க-விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஒப்பந்தம் ஆனது. இதில் 6 தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த உடன்பாடு ஒப்பந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் கையெழுத்திட்டனர். அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருமாவளவன் பேட்டி
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்த பின்னர், அண்ணா அறிவாலயத்தில் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கோலோச்சிய பல மாநிலங்களில், வெற்றி பெற முடியாத வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு சூது, சூழ்ச்சிகள், சதித்திட்டங்களை அரங்கேற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பா.ஜ.க.வால், தமிழ்நாட்டில் மட்டும் எதையும் செய்ய இயலவில்லை.
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பா.ஜ.க.வின் முயற்சி தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில், சமூக நீதி மண்ணாக விளங்குகின்ற தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை இல்லாது ஒழித்துவிட வேண்டும். சாதி, மதவெறி சக்திகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றெல்லாம், திட்டம்போட்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.
வாக்குகள் சிதறக்கூடாது
எங்களுடைய நோக்கம் சனாதன சக்திகள், சாதிவெறியர்கள் வலிமைப் பெற்றுவிடக்கூடாது, சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில், நல்லெண்ணத்தின் அடிப்படையில், தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தி.மு.க. கூட்டணியில் பயணித்து வந்திருக்கிறோம். இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம்.
இந்த எண்ணிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிர்வாகிகள் குழு அதிருப்தி தெரிவித்த நிலையில், தமிழகத்தை சூழ்ந்துள்ள அனைத்து சூழல்கள், எதிர்கால அரசியல்களை கருத்தில் கொண்டு தி.மு.க. கூட்டணியில் தொடருவது தான் முதன்மையானது, மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் எக்காரணம் கொண்டும் சிதறிவிடக்கூடாது. அப்படி சிதற விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு காரணமாக இருந்துவிடக்கூடாது என்கிற அடிப்படையில், தொகுதி உறுதிபாட்டை ஏற்படுத்தி இருக்கிறோம்.
தனி சின்னம்
6 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் என்பதை விரைவில் முடிவு செய்வோம். இந்த 6 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து 25 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் தலைமையிலான குழுவினர் 10 தொகுதிகளுக்கு மேல் கேட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்தனர்.
ஆனால் தி.மு.க. தரப்பில் இரட்டை எண்ணிக்கையில் தொகுதிகள் வழங்க முடியாது. ஒற்றை இலக்கத்தில் தான் வழங்க முடியும் என்று பேச்சுவார்த்தையை முடித்து வைத்தனர். அதாவது இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிகபட்சம் 6 தொகுதிகள் வரை வழங்க தி.மு.க. தயாராக இருப்பதாக கூறப்பட்டது.
2-ம் கட்ட பேச்சுவார்த்தை
இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தி.மு.க. வழங்குவதாக கூறிய எண்ணிக்கையில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை கூடுதலாக பெற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு தி.மு.க. தரப்பில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு நேற்று அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஆர்.முத்தரசன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்டு தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று மாலை 5.10 மணியளவில் அண்ணா அறிவாலயம் வந்தனர்.
டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரிடம் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழுவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். ஆனால் தி.மு.க. தரப்பில் 6 தொகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை என்று தெரிகிறது. எனவே தி.மு.க. ஒதுக்கும் தொகுதிகளை பெறும் மனநிலைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வந்தனர். பேச்சுவார்த்தை முடிந்து மாலை 5.40 மணிக்கு முத்தரசன் வெளியே வந்தார்.
இன்று உடன்பாடு
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை மிக இணக்கமான, சுமுகமான முறையில் நிறைவு பெற்று இருக்கிறது. கட்சியின் நிர்வாக கமிட்டியிடம் ஒப்புதல் பெற்று, நாளை (இன்று) தொகுதி பங்கீட்டில் கையெழுத்திடுவோம்' என்றார்.