

சென்னை
சத்தியபாமா கண்ணீர் சிந்துவதற்கு முன் அமைச்சர் ராஜ்மோகன் காதில் ஏதோ கூறினார் என தி.மு.க. கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தாராபுரத்தில் வருகிற 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா பேசும்போது, அ.தி.மு.க. இயக்கத்தின் தலைமை பிடிக்காமல் வெளியே வந்தேனே தவிர அந்த இயக்கம் பிடிக்காமல் வெளியே வரவில்லை.
நாங்கள் துரோகி இல்லை. என் மீது பழி சுமத்துகின்றனர். ஒரு பெண் என்று பாராமல் அசிங்கமான வார்த்தைகளால் என்னை திட்டுவதால் நான் தற்போது மொபைலே பார்ப்பதில்லை. அவ்ளோ அசிங்கமா என்னை பேசுறீங்க. நான் அப்படி என்ன தவறு செய்தேன். அம்மாவினுடைய உண்மையான உணர்வு எனக்குள் இருந்தது.
ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் பதவிக்கு வந்த தூய தலைவர் நமது முதல்-அமைச்சர் விஜய். என் மீது தவறு இருந்தால் முதல்-அமைச்சர் மீண்டும் என்னை வேட்பாளராக நிறுத்தியிருப்பாரா? நானும் உங்களிடம் வந்து துணிச்சலாக ஓட்டு கேட்க முடியுமா? என் மீது சுமத்தப்படும் பழி, பெண் என்றும் பாராமல் பேசும் ஆபாசமான வார்த்தைகள். என் மீது தவறு இருந்தால் நான் திரும்ப வந்திருக்க மாட்டேன் எனறு கூறி சத்தியபாமா கண் கலங்கினார்.
இதனை கவனித்த முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய், சத்தியபாமாவை ஆறுதல்படுத்தினார். மேடையில் சத்தியபாமா உணர்ச்சிவசப்பட்டு அழுதபோது, முதல்-அமைச்சர் விஜய் அவரை அரவணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பேசிய அவர், எனது தொகுதி மக்களுக்கு நல்லது செய்வதற்கு தானே வந்தேன். நான் வேறு எந்த நோக்கத்திலும் வரவில்லையே என்று கூறி கண் கலங்கினார். இந்த நிலையில், தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா கண்ணீர் சிந்துவதற்கு முன் அவருடைய காதில் அமைச்சர் ராஜ்மோகன் ஏதோ கூறினார் என்று தி.மு.க. குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக பள்ளிக்கல்வி துறைக்கான அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, மக்களும், முதல்-அமைச்சர் விஜய்யும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். 8 மணிநேரத்திற்கும் மேலாக மக்கள் காத்திருக்கின்றனர். அதனால் விரைவாக பேசி முடிக்கும்படி கூறினேன் என்றார்.
தொடர்ந்து அவர், தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்க கூடாது என மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதுபற்றி முதல்-அமைச்சர் விஜய் இறுதி முடிவெடுப்பார் என்றார். வெற்றிப்பயணம் திட்டத்தினை முதல்-அமைச்சர் விஜய், சென்னை கோயம்பேட்டில் நாளை துவக்கி வைக்கிறார் என்று கூறினார்.