திமுக கூட்டணி மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது - எடப்பாடி பழனிசாமி

திமுகவின் கூட்டணிக் கட்சிகள் புலம்பிக் கொண்டிருக்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது - எடப்பாடி பழனிசாமி
Published on

ஆலந்தூர்,

ஆலந்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

திமுக கூட்டணி மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவைப் பார்த்து ஸ்டாலின் அதிர்ந்து போயிருக்கிறார். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை 4 நாட்களில் முடிந்து விட்டது. திமுகவில் 25 நாட்களாக தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருகிறது. 25 நாட்களாகியும் முடிவு எட்டப்படவில்லை.

காங்கிரஸ், விசிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் புலம்பிக் கொண்டிருக்கின்றன. அழுதுகொண்டே சிரிக்கிறேன் என்று கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் சொல்லியிருக்கிறார். கூட்டணிக்கு புதிதாக சென்ற கட்சிக்கு அதிக தொகுதிகளை கொடுத்திருக்கிறார். 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.

2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வரை அதிமுகவை, திமுக வீழ்த்தியதாக வரலாறு இல்லை. 2011-ம் ஆண்டில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாமல் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட நாங்கள் 75 இடங்களில் கூட்டணியாக வெற்றி பெற்றோம்.

கடன் வாங்குவதில் தான் ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். திமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனில் பெரிய திட்டம் எதுவும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக கிடப்பில் போட்டுள்ளது. திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் விலைவாசியை குறைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் வீட்டு வரி 100 சதவீதம் உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. ஆலந்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டை. மக்கள் வெள்ளத்தில் நீந்தி இங்கு வந்துள்ளேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com