தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: ம.நீ.ம. நிர்வாகிகளுடன் நாளை கமல்ஹாசன் அவசர ஆலோசனை

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறும் தி.மு.க. தலைமை வலியுறுத்தியது.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: ம.நீ.ம. நிர்வாகிகளுடன் நாளை கமல்ஹாசன் அவசர ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகள் வழங்குவதாகவும், அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறும் தி.மு.க. தலைமை வலியுறுத்தியது.

ஆனால், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனோ, எங்களுக்கு 6 தொகுதிகள் வேண்டும், அதுவும் டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கூறி 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை ஏற்கனவே தி.மு.க. தலைமையிடம் வழங்கியுள்ளார். இந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை குழுவினர், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசினார்கள். ஆனால், 2 தொகுதிகள், தி.மு.க. சின்னத்திலேயே போட்டி என்பதை அறிந்தவுடன் அவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினார்கள்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக குழு, செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அண்ணாநகரில் உள்ள ஹோட்டல் சாம்கோவில் நடைபெறும் இந்த கூட்டம் தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் கமல்ஹாசன் தலைமையில் 20-ந் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சென்னையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com