தி.மு.க. அலுவலக கட்டிடத்தை இடித்தபோது தூண் விழுந்து நிர்வாகி பலி

பெருந்துறை அக்ரஹார வீதியில் உள்ள ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தின் பழைய கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது.
பலி
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கள்ளியம்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் கவுதமன் (வயது 26). இவர் அதே பகுதியில் செயல்படும் விசைத்தறி குடோனில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். மேலும் பெருந்துறை ஒன்றிய தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் பெருந்துறை அக்ரஹார வீதியில் உள்ள ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தின் பழைய கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. கவுதமன் அதை பார்வையிட்டு கொண்டு இருந்தார்.

உயிரிழப்பு

அப்போது இடிக்கப்பட்ட கான்கிரீட் தூண் ஒன்று திடீரென கவுதமன் மீது விழுந்தது. இதில் தலை மற்றும் உடலில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. ரத்தம் வழிய உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை, அங்கு வேலை பார்த்தவர்கள் ஓடி வந்து மீட்டனர். உடனே சிகிச்சைக்காக ஆம்புலன்சில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கவுதமன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தின் பழைய கட்டிடத்தை இடித்த போது, தூண் விழுந்து நிர்வாகி ஒருவர் பலியானது கட்சியினர் மற்றும் அவருடைய உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com