மீனவரைத் தாக்கிய தி.மு.க.வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, வழங்குவதாக உறுதி அளித்த ரூ.5 லட்சம் இழப்பீடை வழங்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு, முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் ரூ.2 லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் சகோதரர் ரமேஷ், விழா மேடையிலேயே முதல-அமைச்சர் ஸ்டாலினிடம் இது குறித்துப் புகார் அளித்தததைம், பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பிக் கொடுத்தததையும், விழா காணொளியில் காண முடிகிறது.

இதனை அடுத்து, மீனவர், சகோதரர் ரமேஷை, அங்கேயிருந்த தி.மு.க.வினர் தாக்கியுள்ளதாகவும் இதனைப் பதிவு செய்த தனியார் செய்தித் தொலைக்காட்சியின் காணொளிகளும், தி.மு.க.வினரால் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தியில், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை அரசால் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்த தி.மு.க. அரசு, தற்போது, வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது தி.மு.க.

உடனடியாக, மீனவர் ரமேஷைத் தாக்கிய தி.மு.க.வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்த ரூ.5 லட்சம் இழப்பீடை வழங்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com