

சென்னை,
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதே போல் புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி, கட்சி தலைமை அலுவலகத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதன்படி தாக்கல் செய்திருந்தவர்களை நேரில் அழைத்து அவர்களிடம் நேர்காணல் நடத்தி, அதில் தகுதிவாய்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதை தி.மு.க. வழக்கமாக கொண்டிருக்கிறது. அதன்படி, புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் முதலில் நேர்காணல் நடத்த திட்டமிட்டு அவர்களை தி.மு.க. தலைமை அழைத்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இந்த நேர்காணல் தொடங்கியது. அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு. புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த முன்னாள் முதல்-மந்திரி ஜானகிராமனின் மகன் ஜே.வி.எஸ்.ஆறுமுகம் என்கிற சரவணன் உள்பட 120 பேரிடம் தொகுதிவாரியாக அழைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
இந்நிலையில் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2வது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். இதன்படி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 22 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்த 750 பேரிடம் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இன்று காலை தூத்துக்குடி தெற்கு, வடக்கு. திருநெல்வேலி கிழக்கு, மத்திய மேற்கு. தென் காசி வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு என கட்சி ரீதியிலான மாவட்டங்களுக்கும், பிற்பகலில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு, தேனி வடக்கு, தெற்கு, விருதுநகர் வடக்கு. தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய கட்சி ரீதியிலான மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடக்க உள்ளது.
இதில் தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொகுதியான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியும் வருகிறது. எனவே இன்றைய நேர்காணலில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் முதல்-அமைச்சர் நேர்காணல் நடத்துவார்.
இதன்தொடர்ச்சியாக 19, 20, 21 மற்றும் 22-ந்தேதிகளிலும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.