

சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தல்
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 25-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி, பள்ளப்பட்டி பஞ்சாயத்து 10-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.
இதில் சிவகாசி யூனியன் 25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 5,785 வாக்காளர்களில் 3,321 பேர் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை நேற்று காலை சிவகாசி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சின்னதம்பி 2,680 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட கணேசன் 439 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஈஸ்வரன் 140 வாக்குகளும், அசோக்குமார் 22 வாக்குகளும் பெற்றனர். 40 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அதிகாரிகள் அறிவித்தனர்.
வார்டு உறுப்பினர்
இதேபோல் பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ஆறுமுகச்சாமி 22 வாக்குகளும், விஸ்வநாதன் 30 வாக்குகளும், சக்திவேல் 221 வாக்குகளும், முத்துராஜ் 188 வாக்குகளும், கணேசன் 107 வாக்குகளும் பெற்றனர். 3 வாக்குகள் செல்லாத வாக்குகள். 221 வாக்குகள் பெற்ற சக்திவேல் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர், உதவி தேர்தல் அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.
கடைகள் அடைப்பு
வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து சிவகாசி யூனியன் அலுவலகம் அருகில் இருந்த கடைகளை திறக்க போலீசார் அனுமதிக்கவில்லை. அதேபோல் அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கும் தடை விதித்து இருந்தனர்.
யூனியன் அலுவலகம் அருகில் உள்ள ஊட்டச்சத்து மையம், ஆனையூர் பஞ்சாயத்து அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம், சி.எம்.எஸ். பள்ளி ஆகியவைகளுக்கு வந்த பொதுமக்களும், மாணவர்களும் அந்த வழியாக செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். போலீசார் அவர்களை மாற்று வழியில் செல்ல வலியுறுத்தினர்.