மேலூரில் ஹிஜாப் பிரச்சினை எழுந்த வார்டில் திமுக வெற்றி

ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த பெண்களுக்கு பாஜக வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்த வார்டில், பாஜக 10 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
மேலூரில் ஹிஜாப் பிரச்சினை எழுந்த வார்டில் திமுக வெற்றி
Published on

மதுரை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 90 சதவீத வெற்றிகளை ருசித்துள்ளது. குறிப்பாக மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் ஹிஜாப் பிரச்சினை எழுந்த 8-வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அங்கு 8-வது வார்டுக்கு உட்பட்ட அல் அமீன் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில், கடந்த 19 ஆம் தேதி முஸ்லிம் பெண்கள் சிலர் வாக்களிக்க வந்தனர்.

அவர்கள் ஹிஜாப் அணிந்தபடி வந்திருந்தனர். அவர்கள் வாக்களிக்க வரிசையில் நின்ற போது, வாக்குச்சாவடிக்குள் இருந்த பா.ஜனதா கட்சியின் முகவர் கிரிநந்தன் (வயது 45) திடீரென எழுந்து, வாக்களிக்க வந்திருப்பவர்கள் யார்? என அடையாளம் காண வேண்டும் எனக்கூறியதுடன், முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப்பை கழற்றுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வாக்க்குச்சாவடியில் பதற்றம் ஏற்பட்டி வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. முகவர் கிரிநந்தனை தீவிர விசாரணைக்கு பின்னர் மேலூர் போலீசார் கைது செய்தனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஹிஜாப் பிரச்சினை எழுந்த மேலூர் 8-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் அந்த வார்டில் பாஜக வேட்பாளருக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com