தபால் வாக்கு தொடர்பாக திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடித்து வைப்பு

கன்னியாகுமரி தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாக திமுக வேட்பாளர் ஆஸ்டின் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.
தபால் வாக்கு தொடர்பாக திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடித்து வைப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்குகள் மூலம் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் தபால் வாக்குகள் பதிவின் போது விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என அந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. மற்றும் திமுக வேட்பாளர் ஆஸ்டின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 1,833 தபால் வாக்குகள் உள்ளது. இதில் 1,761 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்குகளை பதிவு செய்யும்போது தேர்தல் அதிகாரிகள் அந்த தபால் வாக்குகளை கையெழுத்திட்டு மடித்து வைக்காமல், வெளிப்படையாக தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அங்கு கையெழுத்திட்டு மடித்து வைத்துள்ளனர்.

இந்த நடைமுறைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமிரா பொருத்தி வாக்குகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அவை முறையாக பின்பற்றப்படவில்லை. இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஏப்ரல் 10 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புகார்கள் அனுப்பியும், அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திமுக வேட்பாளர் ஆஸ்டின் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், திமுக வேட்பாளர் அளித்த புகாருக்கு ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் பதிலளிப்பதாக தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உள்ளதாக தெரிவித்ததையடுத்து இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com