

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனிடையே தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
அதன்படி திமுக - 164, காங்கிரஸ் - 28, தே.மு.தி.க. - 10, விடுதலை சிறுத்தைகள் கட்சி -8, இந்திய கம்யூனிஸ்டு கட்சி - 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி - 5, ம.தி.மு.க. - 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, மனிதநேய ஜனநாயக கட்சி - 1, எஸ்.டி.பி.ஐ. -1, முக்குலத்தோர் புலிப்படை - 1, தமிழர் தேசம் கட்சி - 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தி.மு.க. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது.. கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை கொடுப்பது என்ற பட்டியல் இன்றைக்குள் முடிவு செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில கட்சிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) உடன்பாடு எட்டப்பட்டு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிக்க உள்ளார்.
இதேபோன்று தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலும் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ள தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பணிகளை முடித்த பின்னர் அவர், திருவாரூரில் இருந்து ஏப்ரல் 2-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொதுக்கூட்டங்கள் வாயிலாக ஆதரவு திரட்டுகிறார்.