‘தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது’ வைகோ பேட்டி

நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் வைகோ தெரிவித்தார்.
‘தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது’ வைகோ பேட்டி
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற, அனைத்து தொகுதிகளுக்கும் தன்னுடைய முழுமையான நேரத்தை வழங்கி, கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் தி.மு.க. வேட்பாளர்களாகவே கருதி வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வோடு கடுமையாக உழைத்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தோம். அப்போது எங்களுடைய கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்.

தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு நூற்றுக்கு நூறு பிரகாசமாக இருக்கிறது என்பதுதான் எங்களுடைய கருத்து. 4 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று (நேற்று) தி.மு.க. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதுதொடர்பாகவும் நாங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். பிரசார முறையை எப்படி வகுக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். அதனை அனுசரித்து ம.தி.மு.க.வும் மிகவும் முனைப்போடு 4 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிக்கு பாடுபடும் என்றும் தெரிவித்தோம்.

பாப்பிரெட்டிப்பட்டியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று தி.மு.க.வின் கோரிக்கை நியாயமானது. தேர்தல் ஆணையமும் அதனை ஏற்றுக்கொண்டு, மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் படி பொன்பரப்பி பகுதியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை நாங்களும் வலியுறுத்துகிறோம். பொது அமைதி ஏற்படவேண்டும்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். பொன்னமராவதி பகுதியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கொந்தளிப்பு தணியவேண்டும். அமைதி நிலவவேண்டும். அதற்கு கலெக்டர், போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட அனைவரும் முழு மூச்சில் ஈடுபடவேண்டும். கொந்தளிப்புக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com