“தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்” திருநாவுக்கரசர் பேட்டி

“சென்னையில் நாளை பஸ் கட்டண உயர்வு தொடர்பாக தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்” என்று திருநாவுக்கரசர் கூறினார்.
“தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்” திருநாவுக்கரசர் பேட்டி
Published on

நெல்லை,

நெல்லையில் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மாணவர்களை பெரிதும் பாதிக்க கூடிய நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பஸ் கட்டண உயர்வு தொடர்பாக சென்னையில் தி.மு.க. நாளை (செவ்வாய்க்கிழமை) கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். காங்கிரஸ் கட்சி சார்பில் நானும் (திருநாவுக்கரசர்) மற்றும் பிற கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளோம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை. புதிய ரெயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களை கடுமையாக எதிர்த்தார். ஆனால், இன்று ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களைகூட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து வருகிறார். மத்தியில் உள்ள மதவாத அரசுக்கு ஒத்து போகும் ஊழல் அரசாக தமிழக அரசு உள்ளது.

தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சதவீதம் போட்டு பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் எந்த பணியும் முறையாக நடக்கவில்லை.

அ.தி.மு.க. சார்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் நிலை உள்ளது. இந்த பிரச்சினையில் ஐகோர்ட்டு சரியான தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். 18 பேர் பதவியை நீக்கியது செல்லாது என்று தீர்ப்பு வந்தால் தமிழக ஆட்சி கலையும். அதன்பிறகு தேர்தல் நடைபெறும். தமிழக மக்களும் தேர்தலையே எதிர்பார்த்து உள்ளார்கள்.

மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக துணை சபாநாயகர் தம்பிதுரையும், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எம்.பி.யும். குரல் கொடுத்து உள்ளார்கள். அவர்கள் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து முன்கூட்டியே மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்க வேண்டும். அது நிறைவேறாத பட்சத்தில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டில் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட்டில் 5 ஆண்டு திட்டம் போல் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு உள்ளனர்.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி நடந்தாலும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக கட்சி ரீதியாக பேசி தீர்வு காணமுடியாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை அந்தந்த மாநிலங்கள் வழங்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்பதை பார்க்க வேண்டும்.

நாங்கள் தற்போது தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளோம். அதனால் வேறு கட்சிகளுடன் கூட்டணி சேருவது பற்றி பேசுவதற்கு இல்லை.
இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

இதற்கிடையே, திருநாவுக்கரசர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவதற்கு ஒரு தரப்பினர் திரண்டனர். குறுக்குத்துறை கோவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநாவுக்கரசர் மேலப்பாளையம் வழியாக ஏர்வாடி செல்வார் என்று மாவட்ட பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் சிலர் மேலப்பாளையத்தில் காத்திருந்தனர். அவர்கள் கையில் கருப்பு கொடியுடன் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆனால், திருநாவுக்கரசர் குறுக்குத்துறையில் இருந்து சந்திப்பு, வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம் வழியாக ஏர்வாடிக்கு சென்றதால், கருப்பு கொடி காட்ட முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் நிர்வாகிகளிடம் பேசி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com