

சென்னை,
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் 17-வது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது.
ஆளுங்கட்சியான தி.மு.க., கடந்த (2021) சட்டமன்ற தேர்தலைப் போலவே, காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை தொடர்கிறது.
அதனால், தே.மு.தி.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ் அணி) ஆகிய கட்சிகளையும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர தி.மு.க. தலைமை முயற்சிக்கிறது. ஆனால், கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், 'கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பதால், தி.மு.க. கூட்டணியில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தக் கட்சியுடனும் பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை. அதற்கான குழு கூட இன்னும் அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணிக்குள் மோதல் நிலவி வருவதாக சில தகவல்கள் வெளியாகின. இதனை காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான ஏற்பாடுகள் பொதுவாக தேர்தலுக்கு முன்பே தீர்மானிக்கப்படுகின்றன. இதனை சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கக்கூடாது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள் மோதல் எதுவும் இல்லை. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி பலமாக உள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.