‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது கணவன், மனைவி உறவு’ திருநாவுக்கரசர் பேட்டி

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது கணவன், மனைவி உறவு போன்று நன்றாக உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறினார்.
‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது கணவன், மனைவி உறவு’ திருநாவுக்கரசர் பேட்டி
Published on

சென்னை,

சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, பாராளுமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக்கி, பொதுக்கூட்டத்தில் பேசுவது போல முழுவதும் காங்கிரஸை தாக்கி பேசி இருக்கிறார். இது வருந்தத்தக்க ஒன்று.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் இரு கண்கள் போன்றவை. இந்தநிலையில், காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என மோடி கூறுவது பகல் கனவாகத்தான் அமையும்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின் மோடிக்கு பயம் வந்துவிட்டது. அதன் காரணமாக தான் தொடர்ந்து ராகுல் காந்தி, சோனியாகாந்தியை விமர்சித்து வருகிறார்.

தமிழகத்தில் உயர்க்கல்வித் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் கள்ள துப்பாக்கி விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இது பொதுமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கள்ள துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் தமிழக அரசு பெரும்பான்மை இல்லாத அரசாகவே செயல்படுகிறது. எனவே, நியாயமாக பார்த்தால் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு தான் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது கணவன்-மனைவி உறவு போன்று நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் கூட்டணி வைக்குமா என்று கேட்பது. ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை கட்டிக் கொள்வீர்களா? என்று கேட்பது போல் உள்ளது.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ஒத்த கருத்துடைய கட்சியினர் கூட்டணியில் இணைய உள்ளனர். எனவே கூட்டணி விரிவடைவதுடன் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அகில இந்திய காங்கிரஸ் தகவல் ஆய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com