பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தடுக்கும் திமுக, காங்கிரஸ் - அண்ணாமலை

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

2011-ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி 543-ஆக உள்ள மக்களவை தொகுதிகள் 850 ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. தொகுதிகளை மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை உயர்த்திய பின் மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டது.

இது தொடர்பாக தொகுதி மறுவரையறை மசோதா 2026, 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வடமாநிலங்களில் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதனிடையே, தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீதும் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் மசோதாக்கள் தோல்வியடைந்தன. இந்த நிலையில் பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் மசோதா நிறைவேறாமல், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்து வாக்களித்திருக்கின்றன என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களவையில், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் பெண்கள் ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறாமல், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்து வாக்களித்திருக்கின்றன.

சுமார் 30 ஆண்டுகளாக, பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தில் இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சி, தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளால் தடைபட்டு வருகின்றன.

கடந்த 2010-ம் ஆண்டும், தங்கள் ஆட்சிக் காலத்தில், இந்த மசோதாவை தாக்கல் செய்யாமல் துரோகம் செய்தது காங்கிரஸ் - திமுக கூட்டணி. தற்போது, மீண்டும் ஒரு முறை, இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்து, நாடு முழுவதும் உள்ள மகளிருக்குத் துரோகம் இழைத்திருக்கின்றன.

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தடுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள், பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதற்கு இதுவே சாட்சி" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com