விமானத்தில் பாலியல் அத்துமீறல் - திமுக கவுன்சிலர் கைது

டெல்லி சென்ற இண்டிகோ நிறுவன விமானத்தில் பெண் பணியாளரிடம் பாலியல் ரீதியாக திமுக கவுன்சிலர் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
விமானத்தில் பாலியல் அத்துமீறல் - திமுக கவுன்சிலர் கைது
Published on

சென்னை,

சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில், 25 வயதுடைய விமான பணிப்பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் ஆகிய இருவரை சென்னை விமான நிலைய மகளிர் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 25ம் தேதி, சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலரான பிரபாகரன் மற்றும் அவரது நண்பரும், வழக்கறிஞருமான தியாகு ஆகியோர் பயணித்துள்ளனர்.

பயணத்தின் போது இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விமானத்தில் பணியில் இருந்த 25 வயதுடைய பணிப்பெண்ணை சைகை காட்டி பாலியல் தொல்லை கொடுத்தனர். அந்த பெண்ணின் ஊர் பெயரை கேட்டு தொடர்ந்து கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எல்லை மீறி அந்த பெண்ணின் மீது கை வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர்.

இந்த அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த அந்த பணிப்பெண், விமானம் டெல்லியை சென்றடைந்ததும் இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அன்றைய தினமே, சென்னை மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், சம்பவத்தன்று பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, பிப்ரவரி 26ம் தேதி மீண்டும் முறையான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

போலீசார் சம்மன் அனுப்பியும், இருவரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மீனம்பாக்கம் மகளிர் காவல் துறையினர், அவர்கள் இருவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, நேற்று மாலை பிரபாகரனும் தியாகுவும் டெல்லியிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த போலீசார், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருவரும் விமானத்திலிருந்து இறங்கியதும், அங்கேயே வைத்து அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com