தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோவையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மனுக்களை பெற்றபோது எடுத்தபடம்.
கோவையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மனுக்களை பெற்றபோது எடுத்தபடம்.
Published on

பொள்ளாச்சி சம்பவம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆ.சங்கம்பாளையத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இ்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்துக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி வந்தது ஆளும் கட்சி. நாங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். மகா யோக்கியரைப் போல நடந்து கொண்டார் பொள்ளாச்சி ஜெயராமன். அவதூறு வழக்குகள் எல்லாம் போட்டார். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது?. பொள்ளாச்சி சம்பவமே அ.தி.மு.க. பிரமுகர்களால் தான் நடந்தப்பட்டது என்பதை நாம் சொல்லவில்லை, சி.பி.ஐ. சொல்லி விட்டது.

வெட்கமாக இல்லை?

இதுதான் பெண்களை பாதுகாக்கும் அரசாங்கமா?. பெண்களை பாதுகாக்கும் அரசாங்கம் என்று விளம்பரம் கொடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா?. சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு போட்ட பிறகும் அவர்களிடம் இது தொடர்பான ஆவணங்களை தராமல் இழுத்தடித்த எடப்பாடி பழனிசாமி அரசு தான் பெண்களை காப்பாற்றும் அரசா?.

நியாயம் கிடைக்கவில்லை என்றால், இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அந்த ராஜாக்களின் வேடம் கலைந்துவிடும். அப்போது சட்டத்தின் பிடியில் இருந்தும், இந்த ஸ்டாலினிடம் இருந்தும் அவர்கள் தப்ப முடியாது என்பதை உறுதியாக சொல்கிறேன்.

பெண்களை ஏமாற்றாதீர்கள்

மகளிர் சுயஉதவிக்குழுவை வளர்க்கவில்லை. அவர்களுக்கு கடன்கள் தரவில்லை. பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் இல்லை. இதில் எடப்பாடி பழனிசாமி அரசு அக்கறை செலுத்தவே இல்லை. ஒருவேளை ஜெயலலிதா மீதான கோபத்தை, சசிகலா மீதான கோபத்தை தமிழ்நாட்டு பெண்கள் மீது எடப்பாடி பழனிசாமி காட்டுகிறாரா என்று தெரியவில்லை. ஜெயலலிதா என்ற பெண்ணால், சசிகலா என்ற பெண்ணால் தான் நீங்கள் பதவிக்கு வந்தீர்கள். இன்று அதிகாரத்தை அனுபவிக்கிறீர்கள். உங்களது ஆட்சியில் மகளிருக்கு செய்தது என்ன? கொடுத்தது என்ன? கஷ்டமும் கண்ணீரும் தான்.

அ.தி.மு.க. என்ற கட்சிக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு போட்டீர்களே? அதில் ஒரு பெண் உண்டா? இல்லையே? பிறகு எதற்காக பெண்களை ஏமாற்றுகிறீர்கள்? இதோ இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்துள்ளார்கள் என்றால் இது ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தின் வெளிப்பாடு.

சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து

இந்த கோபம், தேர்தலின்போது அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறியும். அடுத்து அமைய இருக்கும் தி.மு.க. ஆட்சியில் பெண்கள், மகளிர், குழந்தைகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்படும். ஏழை, எளிய மக்கள் விவசாயிகள், பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை வாங்கி உள்ள நகைக்கடன்களை ரத்து செய்வோம் என்று ஏற்கனவே சொல்லி

இருக்கிறேன்.

இன்று இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் வாங்கிய கடன்களை தி.மு.க. அரசு அமைந்தவுடன் தள்ளுபடி செய்யும். இந்த ஆட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஒழுங்காக செயல்படவில்லை. அவர்களுக்கு தேவையான கடன்களை வழங்கவில்லை. மகளிர் சுயஉதவிக்குழுவின் நோக்கத்தையே சிதைத்து விட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சீரமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் அவர்களுக்கு தரப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படும்.

கவலையை தீர்க்கும் ஆட்சி

இந்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருப்பார். உடனே இதே தள்ளுபடி அறிவிப்பை நாளையே அவரும் வெளியிட்டாலும் வெளியிடுவார். அவர்தான், நான் என்ன சொல்கிறேன் என்பதை கவனித்து அதனை வரிசையாக செய்து கொண்டு வருகிறாரே!

இதைசொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். கோபம் வந்தாலும் அதுதான் உண்மை. மக்கள் அனைவரது கவலைகளையும் தீர்க்கும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com