திமுக, வேண்டுமென்றே அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்துகிறது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

போக்குவரத்து ஊழியர்களை தூண்டிவிட்டதும், தற்போது போராட்டம் நடத்துவதும் திமுக தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami | #OPanneerselvam | #BusFareHike
திமுக, வேண்டுமென்றே அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்துகிறது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை

சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணியை முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து திமுக போராட்டம் நடத்துவது மக்கள் நலன் கருதி அல்ல; இது ஒரு அரசியல் ரீதியான போராட்டமே. 2011ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது, போக்குவரத்து துறை கடும் நஷ்டத்திலும் கடனிலும் இருந்தது. அதற்கு முந்தைய திமுக அரசின் செயல்பாடுகள்தான் காரணம்.

2011ம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைந்தபோது, போக்குவரத்துத்துறைக்கு 3392.15 கோடி ரூபாய் கடன் இருந்தது. ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய நிலுவைத்தொகை 922.24 கோடி ரூபாயாக இருந்தது. பணியில் இருக்கும் ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை 1528.05 கோடி. 8500 பேருந்துகளின் ஆயுட்காலம் முடிந்தநிலையில், அவற்றை திமுக ஆட்சியில் அப்படியே இயக்கிக்கொண்டிருந்தனர்.

போக்குவரத்து துறைக்கு சொந்தமான 112 சொத்துகளை திமுக ஆட்சியில் அடமானம் வைத்திருந்தனர். இவ்வளவு நிதி நெருக்கடியையும் சவால்களையும் தாங்கிக்கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகம் செய்துகொண்டிருந்தோம்.

திமுக ஆட்சியில் இருந்ததை விட தற்போது, டீசலின் விலை, உதிரி பாகங்களின் விலை, ஊழியர்களின் ஊதியம், புதிய பேருந்துகளின் விலை என அனைத்துமே 30 முதல் 40% வரை உயர்ந்துள்ளது. எனவே பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகம் செய்ய முடியாது என்ற சூழலில் தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த சூழலை நன்கு அறிந்த திமுக, வேண்டுமென்றே அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்துகிறது. போக்குவரத்து ஊழியர்களை தூண்டிவிட்டதும், தற்போது போராட்டம் நடத்துவதும் திமுக தான்.

பேருந்து கட்டணம் குறைப்புக்கு பிறகும் நாள் ஒன்றுக்கு ரூ 4 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.என முதல்வர் பழனிசாமி கூறினார்.

#EdappadiPalaniswami | #OPanneerselvam | #BusFareHike | #OPS | #EPS

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com