

சென்னை,
தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக ஒரு புதிய ஆட்சி அமைந்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்ற விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சிக்கட்டிலை பிடித்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றுள்ளார்.
தி.மு.க. தனித்து 60 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்து விட்டார். அதே நேரம் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மெய்யநாதன், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் வெற்றி பெற்று இருந்தனர்.
துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனி வேல்ராஜன், தா.மோ.அன்பரசன், நாசர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நாளை மறுநாள் (14-ந்தேதி) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்" 14-05-2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் "கலைஞர் அரங்கில்" நடைபெறும். அப்போது மாவட்ட கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.