

சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
உறுப்பினர் தங்கம் தென்னரசு:- காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி தி.மு.க. ஆட்சியில் ரூ.175 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டது. உங்கள் (அ.தி.மு.க.) ஆட்சியில் இந்த திட்டத்தை மூன்றாக பிரித்தீர்கள். அதில் ஒன்று காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம். மத்திய அரசு நிதியில் இந்த பணி நடக்கிறதா?. மாநில அரசு நிதியில் நடக்கிறதா?.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் மத்திய அரசு எடுத்தது. ஆனால், மத்திய அரசு இந்த பணியை எடுத்தால் காலதாமதமாகும் என்று, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாநில அரசே எடுத்துச் செய்வதாக அறிவித்தார். இந்த திட்டத்துக்காக முதற்கட்டமாக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர் தங்கம் தென்னரசு:- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளது. அதன் முழு கொள்ளளவான 152 அடி நீரை நிரப்பும் அளவுக்கு அணையை பலப்படுத்த வேண்டும். பேபி அணை முன்பு 23 மரங்கள் உள்ளன. அந்த மரங்கள்தான் வளர்கிறதே தவிர, அணை வளரவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக கொண்டு வந்ததே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். அங்குள்ள 23 மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுக்கவில்லை. அதில், 2, 3 மரங்களை வெட்டியபோது, தமிழக அதிகாரிகள் மீது வழக்கு போட்டனர். கட்டுமான பொருட்களை கொண்டு செல்லக்கூட கேரளா அனுமதி மறுக்கிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கு முடிந்ததும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்.
உறுப்பினர் தங்கம் தென்னரசு:- அமராவதி அணைக்கு மேற்கு தொடர்ச்சிமலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. ஆனால், கேரளா அரசு இடுக்கி பேக்கேஜ் என்ற திட்டத்தை அறிவித்து 6 இடங்களில் அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதனால், 2 டி.எம்.சி. தண்ணீர் நமக்கு வருவது பாதிக்கப்படும். இந்த அணைகளை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?.
பாசனத் துறைக்கு 2013-2014-ம் ஆண்டு ஒதுக்கிய நிதியான ரூ.1,160 கோடியில், ரூ.781.84 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதுஏன்?.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ஒரு அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்றால், கீழ் இருக்கும் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும். ஆனால், அது பின்பற்றப்படுவது கிடையாது. இதனால், நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். கேரள முதல்-மந்திரி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- கேரள முதல்-மந்திரியுடன் பேசி இந்த பிரச்சினைக்கு பரிகாரம் காண்பது நல்ல விஷயம்தான். ஆனால், ஏற்கனவே பலமுறை பேசியாகிவிட்டது. தீர்வு ஏற்பட வேண்டும். இப்போது கேரள முதல்-மந்திரியாக இருப்பவர் சாந்தமானவர். அவரை நேரடியாக நீங்களே சந்தித்து பேசுங்கள். இரு மாநில முதல்-அமைச்சர்களும் நேரடியாக உட்கார்ந்து பேசினால் முடிவு கிடைக்கும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அவர் நல்ல முதல்-மந்திரி என்பதால் அவரை நாடியுள்ளோம். கேரள மாநில நீர்வள மந்திரி கிருஷ்ணன் குட்டி முழு அக்கறையோடு செயல்படுகிறார். எனவே, நல்ல முடிவு கிடைக்கும். முதற்கட்டமாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது.
உறுப்பினர் தங்கம் தென்னரசு:- முன்பு இந்த துறை மானிய கோரிக்கை என்றால், சட்டசபையே அலங்கரிக்கப்பட்டிருக்கும். இன்று கலை இழந்து போய் உள்ளது. இந்த துறையும், இந்த அரசும் கலை இழந்த மாடமாக உள்ளது. இந்த அரசு மாறும் நாள் விரைவில் வருகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகத்தான் இந்த பணிகள் நிறுத்தப்பட்டது. அலங்காரம் எதுவும் செய்யவில்லை.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- அவர்கள் (தி.மு.க.) ஆட்சிக்கு வருவதாக இன்ப கனவு காண்கிறார். ஆனால், அது பகல் கனவாக முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.