அரசு குடியிருப்பில் தி.மு.க. தேர்தல் அலுவலகம்: அதிகாரிகள் சீல் வைத்தனர்

கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்புக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு குடியிருப்பில் தி.மு.க. தேர்தல் அலுவலகம்: அதிகாரிகள் சீல் வைத்தனர்
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் நடத்தை விதிகளைக் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியான தீரஜ்குமார் என்பவர் தேர்தல் கண்காணிப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றாலம் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள அவரை சந்தித்த தேசியக் கட்சி ஒன்றின் மாவட்ட நிர்வாகி, பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

புகார் விவரம்:

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "கடையநல்லூர் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே அமைந்துள்ள நகராட்சி பொறியாளர் குடியிருப்பை, நகரமன்றத் தலைவர் தலைமையிலான தி.மு.க.வினர் தேர்தல் அலுவலகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். மாலை நேரங்களில் அங்கு தேர்தல் களப் பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, விதிகளை மீறிச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன."

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் பார்வையாளர் தீரஜ்குமார், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில் புகார் தொடர்பாக முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நகராட்சி பொறியாளர் குடியிருப்புக்குத் தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

அரசு அலுவலகக் குடியிருப்புக்குத் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்த இந்தச் சம்பவம் கடையநல்லூர் தொகுதி மட்டுமின்றி, தென்காசி மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பாரபட்சமற்ற நடவடிக்கை பொதுமக்கள் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com