

கடலூர்,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 56). தி.மு.க. கிளை செயலாளரான இவர், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பழனியம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த பன்னீர்செல்வம், சட்டமன்ற தேர்தல் முடிவுகளை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தி.மு.க. கூட்டணி 74 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததையும், மற்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததையும், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததை கண்டும் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து பதறிய அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க. நிர்வாகி இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.