

சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில், இன்று (சனிக்கிழமை) அவர் மதுரை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 10.30 மணிக்கு மதுரையை சென்றடைந்தார். பின்னர் மதுரையில் இருந்து காலை 10.45 மணிக்கு காரில் புறப்பட்டு, எல்காட் தொழில்நுட்ப பூங்காவுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுவிட்டு, காலை 11.35 மணிக்கு பின்னாகிள் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
பின்னர், அங்கிருந்து காலை 11.45 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் நோக்கி காரில் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்தின் ஒரு பகுதியினை திறந்து வைப்பதுடன் மருதுபாண்டியர் சகோதரர்களின் உருவச் சிலையினையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில், தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. முன்னதாக திமுக வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான "என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி" பயிற்சி மாநாடு சென்னை மற்றும் திருப்பத்தூரில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த சூழலில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 20 திமுக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இந்த பயிற்சி மாநாடு மதுரை உத்தங்குடியில் அமைந்துள்ள ‘கலைஞர் திடல்’ வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். உணவு தயாரிக்கும் கூடம் மட்டும் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குடிநீர் பாட்டில் அடங்கிய பைகள், அவர்களது இருக்கைகளிலேயே முன்கூட்டியே வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் ஹாட்பாக்சில் மணக்க.. மணக்க.. மட்டன் பிரியாணி வழங்கப்படுகிறது.