தென் மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மாற்றம்

மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் திடீரென மாற்றப்பட்டு உள்ளனர்.
தென் மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மாற்றம்
Published on

சென்னை,

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாவட்ட எல்லைகளைத் திருத்தம் செய்வதற்கென, உயர்நிலைச் செயல் திட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் குழு, தனது அறிக்கையை கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியதன் அடிப்படையில், மாவட்ட வாரியாக திருத்தங்களை மேற்கொண்டு, ஏற்கனவே உள்ள மதுரை மாநகர் மாவட்டங்களின் எண்ணிக்கையை குறைத்து, தற்போது மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு என செயல்பட்டு வரும் 2 மாவட்டங்களும் மதுரை மாநகர் மாவட்டம் என ஒரே மாவட்ட கழகமாக இனி செயல்படும்.

இவ்வாறு அமையப்பெறும் மதுரை மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக கோ.தளபதியும், பொறுப்புக்குழு உறுப்பினர்களாக வ.வேலுசாமி, பெ.குழந்தைவேலு, பி.எஸ்ஸார் கோபி, சி.சின்னம்மாள், பொன்.மு.சேதுராமலிங்கம், ஜெ.ஜவஹர், மா.ஜெயராமன், தமிழரசி, டாக்டர் பா.சரவணன் ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள்.

இப்புதிய மதுரை மாநகர் மாவட்ட கழகம், மதுரை வடக்கு தொகுதி - மதுரை தெற்கு தொகுதி - மதுரை மத்தி தொகுதி - மதுரை மேற்கு தொகுதி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கொண்டதாக அமையும். ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி, வட்ட அமைப்பின் நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேனி மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.ஜெயக்குமார், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கம்பம் ராமகிருஷ்ணன் தேனி மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சுப.த.திவாகரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இதேபோல், மதுரை மாநகர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்தி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களில் சில ஒன்றிய கழக செயலாளர்களும் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிதாக ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com