

சென்னை,
கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தொல்லை என கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபி அலுவலகத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டர் பத்மஜாவுக்கு, அதே தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் கலெக்டரின் இல்லத்திற்குச் சென்று தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவத்திற்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான திரிசூலி சென்னை டிஜிபி அலுவலகத்தில் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபி அலுவலகத்தில் திமுக புகார் அளித்துள்ளது. கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தொல்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்த பின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
காவல் துறையில் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. சாதாரண பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை.
இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறாத சம்பவம். த.வெ.க ஆட்சியிலே மிகக் கேவலமான ஒரு சம்பவத்தை இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு நடைபெற்றிருக்கிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட நாளிலே இருந்து தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் பல்வேறு வகையிலே பாதிக்கப்பட்டிருந்தாலும், அனைத்துக்கும் உச்சமாக ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர், அதிலும் ஒரு பெண் கலெக்டருக்கு ஏற்பட்டிருக்கிற இந்த ஆபத்தான சூழ்நிலை இதுவரையிலே தமிழ்நாட்டில் ஏறத்தாழ இந்த 77 ஆண்டு காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற விஜய் அவர்கள். அவருடைய கீழே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள்.
திருப்பதி கொடை ஊர்வலம் நடைபெற்றபோது ஒரு பெண் காவலர் த.வெ.க நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தல், அதாவது வந்து ஈவ் டீசிங் செய்வதைப் போல அந்த இடத்திலே சில்மிஷமாக நடந்து கொண்டார் என்று புகார் அளிக்கப்பட்டு, காவல் நிலையத்திலே அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்கிறார்கள். இந்தச் சம்பவம் நடைபெற்றது ஆதவ் அர்ஜுனா சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற வில்லிவாக்கல் தொகுதியில். அன்றைய தினம் காவல் துறையினர் கைது செய்து வைத்தவரை உடனடியாக மேலிடத்திலிருந்து தொலைபேசியிலே உத்தரவிட்டு, இவ்வளவு பெரிய தவறை, ஒரு பெண் போலீஸிடமே கேவலமாக நடந்து கொண்ட ஒரு த.வெ.க நிர்வாகியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லி விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆக, எல்லா த.வெ.கக்காரர்களுக்கும் தைரியம் வந்துவிட்டது. ஏன்னா, ஒரு வுமன் போலீஸை அடித்தவர்களைக்கூட காவல் நிலையத்திலிருந்து விட்டுவிட்டார்கள் என்ற செய்தியைப் பார்த்த உடனே துணிச்சலாக எல்லாத் தவறையும் செய்யக்கூடிய மனப்பான்மை வந்துவிட்டது.
சாதாரண ஒரு த.வெ.க நிர்வாகியே போலீசிடம் தவறாக நடந்து கொண்டதற்கு விட்டுவிட்டார்கள் என்றால், நாம் ஒரு எம்.எல்.ஏ. ஆகவே, நாம் எதையும் செய்யலாம் என்ற திமிர்த்தனமாக, குடிபோதையிலே போய் ஒரு ஆட்சித் தலைவருக்கு கேவலமான மெசேஜ் அனுப்பி, மெசேஜ் அனுப்பியதோடு மட்டுமல்ல, இரவு நேரத்திலே அப்பாயின்ட்மெண்ட் இல்லாமல் நேரடியாக அவங்க வீட்டுக்குப் போய் குடிபோதையிலே அந்த அம்மையாரைத் துன்புறுத்துகிற நோக்கத்தோடு ஈடுபட்டதாக எல்லாவிதமான ஆதாரங்களும் காவல் துறையினருக்கு எங்கள் மாவட்டக் கழகத்தின் செயலாளர் வசந்தன் கார்த்தி அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
எல்லா சோசியல் மீடியாவிலும் வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட அந்த மாவட்ட ஆட்சித் தலைவருடைய கணவரே இன்றைக்கு புகார் கொடுத்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. காவல் துறையில் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. சாதாரண பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. நேற்றைக்கு முன்தினம் மட்டும் 17 கொலை. இன்று காலையிலே வருகிறபோது, புகார் கொடுக்க வருவதற்கு முன்பாகவே கேள்விப்படுகிறோம், நாலு கொலை சென்னையில் நடந்திருக்காங்க. இது நாடா, காடா என்று தெரியவில்லை.
ஆகவே, டிஜிபி இடத்திலே நாங்கள் கொடுத்திருக்கிற மனுவில், நாங்கள் ஏற்கனவே மாவட்ட அதிகாரி எஸ்.பி. இடத்திலும் மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே இதற்கு ஒரு முழு விசாரணை, நேர்மையான இன்வெஸ்டிகேஷன் கண்டக்ட் ஏன்னென்று சொன்னால், சட்டமன்ற உறுப்பினரால் பாதிக்கப்பட்டது ஐஏஎஸ் ஆபீசர். ஆகவே, இந்த வழக்கை மிகச் சாதாரணமாக நடத்திவிட்டால், அப்புறம் லா அண்ட் ஆர்டருக்கு தமிழ்நாட்டிலே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் வந்துவிடும்.
ஆகவே, ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்று சொன்னால், இதைத் தனிக் கவனத்துடன் மிக நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரிக்க வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையைக் கொடுத்திருக்கிறோம். மேலும், சிபிசிஐடி-யின் மூலமாகத்தான் இந்த விசாரணை நடைபெற வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். டிஜிபி அவர்கள் முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றதன் காரணத்தால் , அவருக்குப் பதிலாக ஏடிஜிபி அவர்கள் வந்து கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் கொடுத்த மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.