பொதுக்குழு கூட்டம் தொடங்கியது; திமுக கொடியை ஏற்றி வைத்தார் மு.க.ஸ்டாலின்
மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார்.
மதுரை,
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 1 மணி அளவில் விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், பெண்கள் திரண்டிருந்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். மலர்கள் தூவினர்.
மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இந்த பிரமாண்ட ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்துள்ளது. பெருங்குடி பகுதியில் தொடங்கிய இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியானது, கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, ஆரப்பாளையம் பகுதியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து நேற்று இரவில் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை சுற்றுலா மாளிகையில் இருந்து பொதுக்குழு நடைபெறும் உத்தங்குடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக புதூர், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி, உத்தங்குடி பகுதியில் சாலைப்பேரணியாக முதல்-அமைச்சர் சென்றார். சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
அரங்கின் நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து பொதுக்குழுவை தொடங்கி வைத்தார். பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசுகின்றனர். இறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மதியத்திற்கு பிறகு கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பல்வேறு அதிரடி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், திமுக பொதுக்குழு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.








