திமுக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளது - அண்ணாமலை

தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக கொண்ட ஒரே கட்சி திமுக தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
திமுக அரசு விவசாயிகளின்  வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளது - அண்ணாமலை
Published on

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் வளர்ச்சியும், தமிழக மக்கள் நலனுமே கொள்கை என கொண்டு ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக கொண்ட ஒரே கட்சி திமுக தான். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் இருண்ட காலத்தைச் சந்தித்துள்ளது. தங்களின் சுயநலத்திற்காகத் தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கியுள்ள கையாலாகாத திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறியத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் தமிழகம் போதைப்பொருட்களின் கூடாரமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகவும் மாறியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், சாமானிய மக்களை வஞ்சித்து, ஊழலில் திளைக்கும் இந்த கமிஷன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் இது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண்.84-யில் செண்பகவல்லி அணையை சீரமைப்போம் என கூறியது. கடந்த 5 ஆண்டுகளில், செண்பகவல்லி அணையைச் சீரமைக்கத் துப்பில்லாத திமுக அரசு, வீரகேரளம்புதூர் பகுதியில் இரட்டை குளம் திட்டத்தையும் செயல்படுத்தாமல் உள்ளது. அதனால் 48 குக்கிராமங்களும், 15 கிராம பஞ்சாயத்துகளும் வறட்சியின் பிடியில் உள்ளன. இப்படி விவசாயிகள் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளது திமுக அரசு. விவசாயிகளின் கண்ணீருக்கு வரவிருக்கும் தேர்தல் பதில் சொல்லும்.

வாசுதேவநல்லூர் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறவும், வளர்ச்சியடைந்த வாசுதேவநல்லூர் உருவாகவும், வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். திமுகவின் காட்டாட்சி ஒழியட்டும்! தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! வாசுதேவநல்லூர் வளரட்டும்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com