

சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக்கூட நடத்த முடியாத அவலத்தில் தி.மு.க. அரசு..! லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சித்து வாழ்வை அழிக்கும் தி.மு.க. அரசு..!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நேற்று நடைபெறவிருந்த நிலையில் தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி நேரத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாகவும், சில தேர்வு மையங்களில் தேர்வர்களின் எண் இடம்பெறவில்லை என புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் வினாத்தாள் வரவில்லை.
பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட காரணத்தினால், தேர்வர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
தி.மு.க. அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை அலைக்கழித்து, தவிக்க வைத்துள்ள டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்திற்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு பணியிடங்களுக்கான தேர்வைக் கூட நடத்த முடியாத லட்சணத்தில்தான் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமும், போலி திராவிட மாடல் தி.மு.க. அரசும் இருக்கிறது.தி.மு.க. அரசின் அலங்கோல ஆட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது இந்த நிகழ்வு.
அரசு பணியில் சேரும் தமிழக இளைஞர்களின் கனவை கலைத்து, பணம் பறித்து, லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் தி.மு.க. மன்னர் குடும்பமும் தி.மு.க. அமைச்சர்களும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை குவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அலங்கோல ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போலி திராவிட மாடல் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.