தி.மு.க. அரசு மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது: மத்திய இணை மந்திரி எல். முருகன் பதிவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திசை திருப்பும் அரசியல் அம்பலப்பட்டு உள்ளது என மத்திய இணை மந்திரி எல். முருகன் எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.
தி.மு.க. அரசு மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது: மத்திய இணை மந்திரி எல். முருகன் பதிவு
Published on

சென்னை,

தி.மு.க. அரசு, மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது என மத்திய இணை மந்திரி எல். முருகன் எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், தி.மு.க. அரசின் செயலற்ற திறனால் தமிழகத்தில் இன்று மா விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சனையை மத்திய அரசிடம் தள்ளி விட்டு தப்பி விடலாம் என எண்ணுகிறார்.

அண்டை மாநிலமான ஆந்திராவில், அம்மாநில அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து, மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றி மா விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. இன்றைய தமிழ் நாளிதழில் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழ். மாம்பழ கூழ் தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு மா விவசாயிகள் தவிக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்-அமைச்சர் ஊர் தோறும் தனது தந்தையான முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்து கொண்டிருக்கிறார். கட்சியினருடன் சேர்ந்து விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் மத்திய அரசு மீது கைகாட்டி தப்பிக்க முயல்வதையே முதல்-அமைச்சர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக மக்கள் தேர்வு செய்தது எதற்காக? குடும்பம் வளம் கொழிக்க மன்னராட்சி நடத்தும் முதல்-அமைச்சருக்கு மா விவசாயிகளை பற்றி எப்படி கவலை இருக்க முடியும்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com