

சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். புயல் மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை திமுக அரசு அலட்சியப்படுத்தியதால் தான் கடும் பாதிப்பு. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த தேவையான ராட்சத மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவில்லை.எங்கு பார்த்தாலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் மழைக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம். 2015-ம் ஆண்டு புயல் பாதிப்பை அதிமுக அரசு திறமையாக சமாளித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.