‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு அமைதியை நிலைநாட்டியது’ - மு.க.ஸ்டாலின் பதிவு

த.வெ.க. அரசு என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு அமைதியை நிலைநாட்டியது’ - மு.க.ஸ்டாலின் பதிவு
Published on: 

சென்னை,

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு அமைதியை நிலைநாட்டியது என முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தூண்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் மலைக் கோவிலில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று(2025 - டிசம்பர் 3-ந்தேதி) தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 2025 டிசம்பர் 1-ந்தேதி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.

ஆனால், கோர்ட்டு உத்தரவுக்குப் பிறகும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, மலையில் உள்ள தர்கா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, தர்கா நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதேபோல், கார்த்​திகை திருநாளன்று பக்​தர்​கள் அனைவரை​யும் மலை​யில் தீபம் ஏற்ற அனுமதிக்​கக் கோரி மூல மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் அர​விந்த் குமார், விபுல்.எம்.பஞ்​சோலி ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் வரும் 24-ந்தேதி கார்த்திகை தினத்திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு இறுதி உத்தரவு அல்ல என்று கூறியுள்ள நீதிமன்றம் இடைக்கால உத்தரவாக வரும் 24ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, வரும் 24-ந்தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.

மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X