

சென்னை,
எதிர்க்கடசித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
ஏழை, எளிய மாணவர்கள், யாரிடமும் கையேந்தாமல் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் என்ற Right to Education Act (RET). கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றார்கள். மேலும், சுமார் 1 லட்சம் குழந்தைகள் எல்.கே.ஜி. எனப்படும் அறிமுகக் கல்வி வகுப்பிலும் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழக அரசே செலுத்தும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் இந்த கல்வித் தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு வருடமும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் பெற்றோர்கள், ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஒரு மாத காலம் இதற்கென பிரத்யேகமாக உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மே மாத இறுதியில் ஒவ்வொரு பள்ளியிலும் கல்வி உரிமைச் சட்டம் மூலம் வரப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் குலுக்கல் மூலம் பரிசீலிக்கப்பட்டு, 25 சதவீத மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனால் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மற்ற மாணவர்களுடன் கல்வி உரிமைச் சட்டம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களும் பள்ளிகளுக்குச் செல்வார்கள்.
ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதிவரை கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் திறக்கப்படவேயில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்படி இருந்தும், தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு கட்டாயக் கல்வி உரிமை சேர்க்கை இணையதளம் திறக்கப்படவில்லை என்றும்; மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டம் திட்டத்திற்கான நிதி கடந்த ஆண்டுகளில் விடுவிக்கவில்லை என்றும், இதனால் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்ட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித் தொகை நிலுவையில் உள்ளதால், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான நிதி வழங்கினால்தான் இந்த ஆண்டு கல்வி உரிமைச் சட்ட திட்டத்தின் கீழ் கட்டாய கல்வி சேர்க்கை நடைபெறும் என்று பொறுப்பற்ற முறையில், ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கனவை தகர்க்கும் நோக்கத்தில் துறையின் அமைச்சரும், பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்தது.
இந்நிலையில், ஏற்கெனவே இந்தத் திட்டத்தின் மூலம் படித்து வரும் மாணவர்களின் நிலுவையில் உள்ள கல்விக் கட்டணம் மற்றும் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்துமாறு தனியார் பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்துகின்றன. பணம் இல்லாத ஏழை, எளிய பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
மாநில அரசு கல்வி உரிமைச் சட்டம் இணையதளத்தை திறக்காதது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தனியார் அமைப்பு கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்கிட மாநில அரசுக்கு உத்தரவிட வழக்கு பதிவு செய்தனர். அவ்வழக்கில் மாண்புமிகு இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு - மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக கட்டாய கல்வி திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறும்; மாநில அரசும், மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல் உடனடியாக மாநில அரசின் நிதியை கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யுமாறு தீர்ப்பளித்துள்ளது. எனவே, மத்திய அரசு பணம் தரவில்லை என்று காரணத்தைக் கூறி, மாநில அரசு தட்டிக்கழிக்காமல் உடனடியாக மாநில நிதியில் இருந்து இத்திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறும், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு இச்சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து விலகிக்கொள்ளக் கூடாது என்றும், ஒவ்வொரு வருடமும் போதுமான கால அவகாசம் எடுத்து கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மற்ற மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதுபோல் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களும் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியும்.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசிடம் வலியுறுத்தி கல்வி உரிமைச் சட்ட திட்டத்தின் நிதியைப் பெறுவதற்கு வக்கில்லாமல், இந்த ஆண்டு கல்வி உரிமைச் சட்ட சேர்க்கைக்கான இணையதளத்தை திறக்காமல் ஏதேதோ காரணம் கூறி காலதாமதம் செய்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதை திமுக ஸ்டாலின் மாடல் அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தன்னுடைய பிள்ளைகள் நலனில் மட்டுமே அக்கறை கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பிள்ளைகள் மீதும் அக்கறை கொண்டு, மாநில நிதியில் இருந்து கல்வி உரிமைச் சட்டத்துக்கான நிதியை விடுவித்து, 25 சதவீத மாணவர் சேர்க்கையை உடனடியாகப் பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.