சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு முன்வர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தை ஆள்பவர்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பின் தேவை தெரியவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு முன்வர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க அம்மாநில ஐகோர்ட்டு மறுத்து விட்டது. சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அம்மாநில அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். சமூகநீதியைக் காக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

பாமகவும் இதையே தான் கூறி வருகிறது. பீகார் ஐகோர்ட்டும் இதே நிலைப்பாட்டைத்தான் மேற்கொண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மாநில அரசின் உரிமை; சமூகநீதியை பாதுகாக்க அது அவசியம் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பயன்தான் இதுவரை 4 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருப்பதும், பல மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதும் ஆகும்

ஆனால், தமிழகத்தை ஆள்பவர்களுக்கு மட்டும் தான் சமூகநீதியும் புரியவில்லை; சாதிவாரி கணக்கெடுப்பின் தேவையும் தெரியவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகாவது அவர்களுக்கு தெளிவு பிறக்க வேண்டும். இதற்குப் பிறகும் குழப்பம் இருந்தால் அரசுத் தலைமை வழக்கறிஞர் வாயிலாக ஐகோர்ட்டிடம் கூட விளக்கம் பெற்றுக் கொண்டாவது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com