ஆசிரியர் நியமனங்களில் தி.மு.க. அரசு காட்டும் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்


ஆசிரியர் நியமனங்களில் தி.மு.க. அரசு காட்டும் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
x

கோப்புப்படம் 

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய பணி நியமன போட்டித் தேர்வை எதிர்கொண்டவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்ற நிலையில், காலிப்பணியிட அறிவிப்புக்கு ஏற்ப 2,563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசிய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதையே கொள்கையாக வைத்திருப்பதோடு, அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை கூட நிரப்ப மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நியமன போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு அரசு பள்ளிகளில் நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story