

அ.தி.மு.க. அரசு
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த சட்டம் என்றாலும், வன்னியர் சமுதாயத்திற்கு அளித்த 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிலைநிறுத்திட ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் அனைத்து விதமான வாதங்களையும் முன் வைத்தது, மூத்த வக்கீல்களை வைத்து வாதாடியது தி.மு.க. அரசு. எந்தெந்த மூத்த வக்கீல்கள் வாதாடினார்கள் என்பது தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது. அதுகூட வேறு ஏதோ மயக்கத்தில் உள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் தெரியவில்லை, எதிர்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் புரியவில்லை.
வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய சட்டப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதன் மூலம் எடப்பாடி பழனிசாமியும், சி.வி.சண்முகமும் வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் 77-வது பாராவில் அரசு தவறு செய்து விட்டது என்று சுட்டிக்காட்டியுள்ள 3 காரணங்களை மயக்கம் தெளிந்த பிறகு சி.வி.சண்முகம் படித்து பார்த்தால் அந்த தவறை இழைத்தது அ.தி.மு.க. ஆட்சி என்பதும், அந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அரசு அ.தி.மு.க. அரசு என்பதும் தெரியவரும்.
இரட்டையர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த உள் இட ஒதுக்கீடு விவாதம் நடைபெற்றது 2012-ம் ஆண்டு. அப்போது இருந்தது யார் ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சி. அந்த ஆணையத்தில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்தபோது, அந்த ஆணையத்தில் உள்ள 7 உறுப்பினர்களில் (தலைவர் உள்பட) 6 பேர் எதிர்த்தார்களே அது யாருடைய ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சி. அந்த 6 பேரும் என்ன சொல்லி எதிர்த்தார்கள்? எங்களுக்கு சாதி அடிப்படையிலான புள்ளிவிவரங்களை கொடுக்காமல் எப்படி பரிந்துரை கொடுப்பது என்று கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது அந்த கேள்விக்கு பதிலளித்து - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து உரிய தரவுகளுடன் ஒருமனதாக ஒரு பரிந்துரையைப் பெறாமல் தூங்கியது - கோட்டை விட்டது யாருடைய ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சிதான். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் இந்த அறிக்கை 24.5.2012-ல் கொடுக்கப்பட்டது. அந்த பரிந்துரையை 8 ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது யாருடைய ஆட்சி. அதுவும் அ.தி.மு.க. ஆட்சிதான். ஆகவே வன்னியர் சமுதாயத்தின் இடஒதுக்கீட்டுப் பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டு வரை போகும் அளவிற்கு அலட்சியமாக செயல்பட்ட இந்த இரட்டையர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
வேண்டா வெறுப்பாக அளித்த இடஒதுக்கீடு
இந்த உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஐகோர்ட்டு தெரிவித்த 7 கருத்துகளில் 6 கருத்துக்கள் சரியல்ல என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் இப்போது அளித்துள்ளது. அது எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் திறமையான சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து முறையான தரவுகளுடன் பரிந்துரை பெறுவதில் நிகழ்ந்த தவறுகளும், குளறுபடிகளும், தேர்தலுக்காக வேண்டா வெறுப்பாக எடப்பாடி பழனிசாமி அளித்த இட ஒதுக்கீடுமே இந்த சமுதாயம் வருந்தத்தக்க தீர்ப்பு வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது. இதுதான் உண்மை.
போராட்டம் இன்றி இடஒதுக்கீடு கிடைக்கும். தம்பி ஸ்டாலின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி இருக்கிறார். எங்கள் கட்சி தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்கும். நிச்சயம் வன்னியர் சமுதாயம் போற்றும் நல்ல முடிவினை உரிய நேரத்தில் எடுக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.