பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை - அண்ணாமலை

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே சென்னை மெரினா சம்பவத்திற்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து திமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகச நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.

முதல்-அமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது, அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு.

தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com