

சென்னை,
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக திமுக ஏ.ஐ. ஊழல் செய்துள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல்முறையாக திமுக ஏ.ஐ. ஊழல் செய்துள்ளது. போலி எழுத்தாளர்களின் பெயர்களில், ஏ.ஐ. மூலம் எழுதப்பட்ட புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு வாங்க கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி காமராஜர் அறிவுலகத்திற்கும் ஏ.ஐ. புத்தகங்களை வாங்க திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி தான் ஏ.ஐ. புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. உயர்நிலைக் குழுவில் உள்ள அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு முறைகேடு நடந்துள்ளது. கடந்த 2, 3 ஆண்டுகளாகவே போலி பெயர்களில் நூலகங்களுக்கு புத்தகங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களை வாங்கும் பரிந்துரையில் ஜெயரஞ்சன் கையெழுத்திட்டுள்ளார். அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கடந்த மார்ச் மாதமே கரூவூலத்தில் இருந்து பணம் அனுப்பப்பட்டுவிட்டது. அகல்விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்களை ஒப்படைத்து பணத்தை திரும்ப பெறுவோம். புத்தகங்களுக்காக கமிசன் பெற்றவர்களிடம் இருந்தும் பணத்தை திரும்ப பெறுவோம்.
திமுக ஆட்சியில் நடைபெற்ற நூலக புத்தக ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும். அனைத்து நூலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு, ஊழல் கண்டுபிடிக்கப்படும். நூலகங்களில் ஊழல் செய்துவிட்டு திமுகவினர் எப்படி கூச்சமே இல்லாமல் நடமாடுகின்றனர்? குப்பை போன்ற புத்தகங்களை திமுகவினர் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வழங்குவார்களா?
நூலகங்களில் ஏ.ஐ. ஊழல் செய்த திமுகவினர் மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், மக்களும், மாணவர்களும் விட மாட்டார்கள். ஊழல் செய்த திமுகவினர் மீது காவல்துறை மூலமும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நூல் கொள்முதல் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மிகத் தீவிரமாக விசாரணை நடத்த உள்ளது. போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தக கொள்முதலிலேயே இவ்வளவு ஊழல் செய்துள்ளார்கள் என்றால் கட்டடம் கட்டியதிலும் ஊழல் நடந்திருக்கும். நூலக கட்டட பணியில் ஊழல் நடந்துள்ளதா என்பதை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.