

சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தேர்தல் விதிமுறைகளையும், ஜனநாயக மாண்பையும் துச்சமென நினைத்து 'வாக்காளர்களுக்கு 8,000 ரூபாய் கூப்பன்' கொடுப்பதாக ஏமாற்றி வருகிறது திமுக. 'தேர்தலில் ஜெயிக்க எந்த சூழ்ச்சிகளையும் செய்யலாம்' என்று செயல்படும் திமுகவின் அற்ப அரசியலால், திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டு பெண்களின் சுயமரியாதையை கேவலப்படுத்தும் விதமாக கூப்பன் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்கிறது தில்லுமுல்லுக்கு பெயர்போன திமுக. அந்த கூப்பன் கொடுக்கும்போது கூட ஏழைப் பெண்மணியை ஆபாச வசவுகளில் திமுக குண்டர்கள் பேசியிருக்கிறார்கள். அதனாலேயே, அந்த சகோதரி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் அமைச்சர்கள் தொடங்கி உள்ளூர் நிர்வாகிகள் வரை பெண்களை இழிவு செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இத்தகைய அராஜக போக்கிற்கு இன்று ஒரு சகோதரி தன் உயிரை மாய்த்திருக்கிறார். பெண்கள் மீதான திமுகவின் ஆணவப் போக்கிற்கு வரும் தேர்தலில் தமிழக பெண்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.