உள்ளாட்சி தேர்தல் தி.மு.க வரலாற்று வெற்றி; 9 மாவட்ட முன்னிலை விவரங்கள்

வேலூரில் மொத்தமுள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தி.மு.க வரலாற்று வெற்றி; 9 மாவட்ட முன்னிலை விவரங்கள்
Published on

சென்னை

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இதுதவிர ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சைகள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால், அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.

தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. வெற்றி பெற்றவர்களின் விவரம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்:-

தி.மு.க. - 986 இடங்களிலும், அ.தி.மு.க. - 199 இடங்களிலும், மற்றவை 139 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட கவுன்சிலர் முன்னிலை நிலவரம் :-

தி.மு.க. - 137 இடங்களிலும், அ.தி.மு.க. - 3 இடங்களிலும், மற்றவை 0 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மாவட்டம் வாரியாக விவரங்கள் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 28 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 26, அதிமுக 1, விசிக 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 19 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 15 இடங்களை திமுக. கைப்பற்றி உள்ளது.

வேலூரில் மொத்தமுள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ராணிப்பேட்டையில் மொத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி. பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 8-யை திமுக கைப்பற்றியது; நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 11 இடங்களில் வெற்றி; காங்கிரஸ் 1, விசிக 1 இடங்களில் வெற்றி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com